வேலூர்: இந்திய விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்ட 1806ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சியின் 216ஆவது ஆண்டு தினம் இன்று (ஜூலை 10) அனுசரிக்கப்படுகிறது. வேலூர் மக்கான் சிக்னலில் உள்ள சிப்பாய் நினைவுத் தூணுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். கோட்டை வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினர்,என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழகம் மற்ற விகிதாச்சாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கல்வி சேர்க்கை விகிதத்தில் முன்னோடி மாநிலமாக உள்ளது. ஒரு சில மாவட்டங்கள் பின் தங்கியும், ஒரு சில மாவட்டங்கள் மேலோங்கியும் உள்ளது, அதனை சமன் செய்ய வேண்டும்.ஆரியம், திராவிடம் என்பது இனம் சார்ந்தது அல்ல, இடம் சார்ந்தது மட்டும் தான்.
தமிழில் பேசிய ஆளுநர் :விந்திய மலைக்கு வடக்கில் உள்ளோரை ஆரியர்கள் என்றும் தெற்கில் உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் பிரித்தனர். அதுவும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதே. மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா போன்ற பகுதிகளிலும் திராவிடம் உள்ளது. பாரத நாட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். அவர்களுக்கு நன்றி செலுத்துவோம். சிறந்த பாரதம், தமிழ்நாட்டை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
தமிழ் மிகவும் பழமையான மொழி, சக்திவாய்ந்த மொழி, தமிழ் மக்களை போன்று பேச வேண்டும் என்பது எனது ஆசை, நிச்சயம் ஒருநாள் பேசுவேன். அதுவரை ஆங்கிலத்தில் பேசுகிறேன்" என்று தமிழில் கூறினர்.
தொடர்ந்து பேசிய அவர், "நம் நாட்டுக்காக சாதி மதத்தை கடந்து போராடினார்கள். வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியன், தீரன் சின்னமலை போன்றவர்கள் சிறந்த போராட்ட வீரர்களாக உள்ளனர். இவர்கள் போராடவில்லை எனில் நாம் இப்போது இருப்பது போல இருக்க முடியாது.
சிப்பாய் புரட்சி: முதல் சுதந்திர போராட்டம் : வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு தேசம் தழுவிய போராட்டம். புரட்சி தொடங்கிய அன்றே சுதந்திர போராட்டம் தொடங்கியது. 1806ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம். நேதாஜி சிப்பாய் வேண்டிய போது முதலில் ஆட்களை அனுப்பியது வேலூரிலிருந்து தான். 75ஆவது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் அனைத்து சுதந்திர போராட்டக்காரர்களையும் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சிலரை மட்டுமே நினைத்து பார்க்கிறோம்.
ஆங்கிலேயர்கள் வருவதற்க்கு முன்னே நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம். வில்லியம் பெனிடிக் 1800களில் இந்திய கல்வியை ஆராய குழு அமைத்தார். அதில் இந்தியா கணக்கு, வரலாறு, கலை, வானியல் போன்ற படிப்புகள் மேலேங்கி இருந்ததை அறிந்தார்கள். கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர், வாழ தகுதியான வீடு என அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே அம்ரூத்கால் திட்டத்தின் நோக்கம். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சூப்பர் நாடாக மற்ற நாடுகள் இந்தியாவை பார்க்கிறது. இதற்கு உதாரணம் தான் கரோனா காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கியுள்ளோம். இந்தியர் என்ற பெருமையோடு நாம் நடக்கலாம்.
பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர் மீதான பார்வையிலேயே தெரியும் இந்தியாவின் நிலை குறித்து. நமது 100ஆவது சுதந்திர தினத்தில் உலகை ஆளும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு. வேலூர் ஒரு வீரபூமி, இந்திய ராணுவத்தில் உள்ள அதிகமானோர் வேலூரை சேர்ந்தவர்களாக உள்ளனர்" என்று பேசினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி மையம்