திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிந்தகமானிபெண்டா என்ற மலை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கிவருகிறது. அப்பள்ளியில் வாணியம்பாடி உதயேந்திரம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக நான்கு ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார்.
இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தன்னுடைய சொந்த செலவில் திறன் பலகை (Inter Active White Board) உருவாக்கி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் பாடங்களை கற்பித்துவந்தார். அரசு பள்ளி ஆசிரியரின் இந்த செயலை ஊடகங்கள் மூலமாக பார்த்த அனைவரும் பாராட்டினர்.
மேலும், இந்த கற்பிக்கும் முறையை தமிழ்நாட்டிலுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் கடைபிடிக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர் அருண்குமார் விளங்கினார். இவருக்கு கனவு ஆசிரியர் விருது, புதுமை கண்டுபிடிப்பு ஆசிரியர் விருது போன்ற விருதுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. மேலும் ,மலை கிராம பள்ளிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதினை இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறந்த பள்ளிக்கான விருது பெற காரணமாக இருந்த ஆசிரியர் அருண்குமார், வட்டார கல்வி அலுவலர் லோகேஷ் ,தலைமையாசிரியர் கலையரசி ஆகியோரை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும், ஆசிரியர்கள் தரப்பில் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மலைப்பள்ளிக்கு வழங்கவேண்டிய சலுகைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: சிறப்புத் தொகுப்பு: பிரதமர் கைகளால் சிறந்த விவசாயி விருது பெற்ற பெண்!