காட்பாடி: மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் 3ம் ஆண்டு நினைவுதினம் இன்று (மார்ச் 7) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே அன்பழகனின் உருவப்படத்துக்கு, எம்.பி. கதிர் ஆனந்த் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணைமேயர் சுனில் குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கதிர் ஆனந்த், "தமிழ்நாட்டில் 5 ரயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதில் காட்பாடி ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது. இதற்காக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆனால் பணிகள் உடனடியாக தொடங்கப்படவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், காட்பாடி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.7 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. கடந்த வாரம் நடைபெற்ற தெற்கு ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து பேசப்பட்டது. அதன் அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் காட்பாடி ரயில் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக எஸ்கலேட்டர் செயல்படவில்லை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினேன். சமூக விரோதிகள் சிலர், நகரும் படிக்கட்டுகளை இரும்புக் கம்பிகளைக் கொண்டு சேதப்படுத்தியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்னும் ஒருவாரத்தில் நகரும் படிக்கட்டுக்கள் சரி செய்யப்பட்டு, அதை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். நகரும் படிக்கட்டுகளின் கைப்பிடியை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.
வெறும் ரயில் நிலையமாக மட்டுமின்றி, பயணிகள் பயன்பெறும் வகையில் வணிக வளாகமாகவும் காட்பாடி ரயில் நிலையம் மாற்றப்படும். தரமான குடிநீர் கிடைக்கவும் வழிவகை செய்யப்படும். தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனக் கூறினார்.
நாடு முழுவதும் 50 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும் என மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது. இதில் தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், காட்பாடி சந்திப்பு ஆகிய 5 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் வழியாக தினமும் 120 ரயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை, திருப்பதி, வேலூர் மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 30,000 பணிகள் வந்து செல்கின்றனர்.