வேலூர்: தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று (அக்.30) வேலூர் மாவட்டத்திலும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அந்த வகையில் வேலூர், காட்பாடியில் உள்ள பிரம்மபுரம் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாமானது, தாங்கல் சுகாதார நிலையம், பிரம்மபுரம் ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது. இந்த ஊராட்சியில் மொத்தம் உள்ள ஏழாயிரத்து 368 பேரில் நான்காயிரத்து 973 பேர் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
’அண்ணாத்த’ டிக்கெட்
இந்நிலையில், மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் அந்த ஊராட்சியின் தலைவரான ராதாகிருஷ்ணன் ஒரு புது முயற்சியைக் கையாண்டுள்ளார்.
அதாவது, அந்த ஊராட்சியில் இருக்கக்கூடியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், அவர்களில் 21 நபர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அவர்களுக்கு ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்துக்கான இலவச டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
குலுக்கல் முறையில் தேர்வு
இதன் விலைவாக அந்த முகாமிற்கு எடுத்து வரப்பட்ட 150 கரோனா தடுப்பூசி டோஸ்களில் நேற்று (அக்.30) மட்டும் 128 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இறுதியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் பெயர்கள் ஒரு ஜாடியில் போடப்பட்டு பிரம்மபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீசன், மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் 21 நபர்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 4ஆம் தேதி ’அண்ணாத்த’ படத்தின் முதல் இரண்டு ஷோக்களுக்கான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்று ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளிப் பண்டிகை: நடமாடும் ஊடுகதிர் வாகனங்கள் மூலம் சென்னையில் சோதனை!