வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்மடுகு பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (54). இவர் நேற்று(நவ.08) அதே பகுதியில் உள்ள கடையில் தனியார் நிறுவனத்தின் பாக்கெட் பால் வாங்கிச் சென்றுள்ளார். அதனை குளிர்சாதனப் பெட்டியில் (Refridgerator) வைத்துவிட்டு, இன்று (நவ. 09) காலையில் தனது மனைவி விஜயாவை (45) பாலை எடுத்து டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து டீயை மகாதேவன்,விஜயா, மகன் அருண்( 22) உறவினர் லலிதா (60) ஆகிய நான்கு பேரும் அருந்தியுள்ளனர். பிறகு டீ குடித்த சிறிது நேரத்திலேயே நான்கு பேருக்கும் வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு கூச்சலிட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று, 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்து மயக்கம் அடைந்தவர்களை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர்கள் நான்கு பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓய்வு பெற்ற பொறியாளர் வீட்டில் திருட்டு: இரண்டு தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு