வேலூர்: சலவன் பேட்டை திருவிக சாலை பகுதியைச் சேர்ந்த குயிலா(31), மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று(அக்.15) மாலை பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக, ராஜா திரையரங்கு பேருந்து நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோவில் ஏறினார். அண்ணா கலையரங்கம் அருகே ஆட்டோ சென்றபோது, நான்கு பெண்கள் ஏறியுள்ளனர். குயிலாவுடன் பேச்சுக் கொடுத்தபடியே இருந்த நான்கு பெண்கள் அவரது பையிலிருந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளனர்.
பழைய பேருந்து நிலையத்திற்கு வந்ததும் ஆட்டோ ஓட்டுநருக்குப் பணம் கொடுப்பதற்காகக் குயிலா பையைத் திறந்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து தன்னுடன் வந்த பெண்கள் பணத்தை திருடிவிட்டதாகக் கூச்சலிட்டார். உடனே பொதுமக்கள் ஆட்டோவில் இருந்த நான்கு பேரையும் பிடித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நான்கு பேரும் சேலம் ஹோலி கிராஸ் தெருவைச் சேர்ந்த காயத்ரி (39), கீதா (28), லதா(29), சந்தியா (30) என்பதும், குயிலாவின் பணத்தை அவரிடம் பேச்சு கொடுத்து திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், அடிக்கடி வேலூருக்குச் சென்று ஆட்டோ, பேருந்தில் வரும் பெண் பயணிகளிடம் திருடுவதை வாடிக்கையாக செய்வதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவர்களை காவலர்கள் கைது செய்து வேலூர் தொரப்பாடியில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பணம் தர மறுத்த தாயைக் கொன்ற மகன்