வேலூர்: அணைக்கட்டு வட்டம் தேவிசெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் இந்திய விமான படையின் தாம்பரம் பிரிவில் பணியாற்றுகிறார். இவரது மனைவி ஹேமா (21). இவர்களுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையொட்டி, ஹேமா தனது தாய் வீடான அணைக்கட்டு வட்டம் ரெட்டியூரில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், குழந்தையைப் பார்க்க கடந்த ஜூலை 9 அன்றிரவு ரெட்டியூருக்கு வந்திருந்த மணிகண்டன், குழந்தை தனது ஜாடையில் இல்லை எனக்கூறி ஹேமாவிடம் ஜூலை 10 அன்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணிகண்டன், பிளேடால் பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பலத்த காயமடைந்த குழந்தையை ஹேமாவும், அவரது குடும்பத்தினரும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், மணிகண்டனின் கைப்பேசி சிக்னலைக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் அவர் சென்னை தாம்பரத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை கைது செய்து வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மணிகண்டனின் தாயையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தையின் தாய் ஹேமா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, "தற்போது அணைக்கட்டு அருகே ரெட்டியூர் கிராமத்தில் உள்ள என் தாய் வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கு கடந்த ஜூலை 9 அன்று DC குப்பத்தைச் சேர்ந்த வெங்கடசாமி - லட்சுமியம்மாள் தம்பதியின் மகன் மணிகண்டனுக்கு பெரியோர்களால் முறைப்படி திருமணம் செய்து வைத்தார்கள்.
என் கணவர் மணிகண்டன் சென்னை தாம்பரத்தில் உள்ள Air force mess ஊழியராக வேலை செய்கிறார். திருமணமான பிறகு என் கணவரும், நானும் தாம்பரம் இந்திரா நகரில் தனிக்குடித்தனமாக வசித்து வந்தோம். திருமணமாகி மறு மாதமே நான் கர்ப்பமானேன். நான் கர்ப்பம் ஆன பிறகு என் கணவர் என் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து அடிப்பார். இதனை அடுத்து என் பெற்றோர் வந்து என் கணவரிடம் பேசியபோது இனிமேல் சந்தேகபடமாட்டேன், தகராறு செய்யமாட்டேன் என்று சொல்லி எனது பெற்றோரை அனுப்பிவிட்டார்.
அதன் பிறகு எங்களுடன் என் மாமியார் லட்சுமியும் வசித்து வந்தார். நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது என் பெற்றோர் வந்து என்னை ரெட்டியூருக்கு அழைத்து வந்து விட்டார்கள். இதனை அடுத்து என் கணவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் போதேல்லாம் இந்த குழந்தை என்னுடையது அல்ல என்று சொல்லி, என் மீது சந்தேகம் அடைந்து என்னுடன் வாய்த்தகராறில் ஈடுபடுவார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8 அன்று என் கணவரும், என் மாமியார் லட்சுமியும் செல்போனில் தொடர்பு கொண்டு, என் பெற்றோரையும் என் தாய்மாமா பிரகாஷையும் வளைகாப்பு செய்ய வேண்டும் என்று DC குப்பம் வர சொல்லவே, நாங்கள் அங்கு சென்றோம். ஆனால் என் மாமியார் வளைகாப்பு நடத்தாமல், என்னை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு போக சொன்னதால் என் பெற்றோர் என்னை அங்கு விட்டுவிட்டு வந்து விட்டார்கள்.
அதன் பிறகு என்னுடன் எனது கணவரும், மாமியாரும் வாய்த்தகராறு செய்து என் மீது சந்தேகம் கொண்டு கர்ப்பமானதை சொல்லி
திட்டி அடித்து துன்புறுத்தினார்கள். இதனை அடுத்து நான் என் பெற்றோருக்கு தகவல் சொல்ல, என்னை என் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் எனக்கு ஜூன் 14ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. என் கணவரும், மாமியாரும் மருத்துவமனையில் வந்து குழந்தையைப் பாரத்துவிட்டு என் கணவர் முக ஜாடை போன்று இல்லை என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனை அடுத்து ஜூலை 10ஆம் தேதி காலை 10 மணிக்கு, எங்கள் வீட்டுக்கு என் கணவர் மணிகண்டனும், என் மாமியார் லட்சுமியும் வந்தனர். அங்கு தூலியில் படுத்திருந்த என் குழந்தையை என் கணவர் தூக்கினார்.
அப்போது என் மாமியாரின் தூண்டுதலின் அடிப்படையில் என்னை கீழே தள்ளிவிட்டு, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்திலும், வலது கையிலும் அறுத்துவிட்டார். நானும், என் அம்மாவும் சத்தம் போடவே என் கணவரும், மாமியாரும் வீட்டில் இருந்து வெளியே ஓடிவிட்டனர்.
உடனடியாக அணைக்கட்டு மருத்துவமனைக்கு எனது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தோம். தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, எனது கணவர் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: பள்ளிக்குப் பொட்டு வைத்துச்சென்ற மாணவியை திட்டிய ஆசிரியர்; மனமுடைந்த மாணவி தற்கொலை