வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கி பகுதியில் பல ஆண்டுகளாக மத போதகர் நோவா என்பவருக்குச் சொந்தமான அகாபே கிருத்துவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தேவாலயத்தின் பின்புறத்தில் உள்ள மத போதகர் நோவாவின் வீட்டில் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் டிப்-டாபாக உடை அணிந்து கொண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் எனக்கூறி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
மத போதகர் மற்றும் அவருடைய மனைவியின் செல்போன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன் அனைத்தையும் பறிமுதல் செய்து கொண்டு தற்போது வருமான வரி சோதனை நடப்பதாகவும் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு தரும்படி கூறியுள்ளனர்.
மத போதகர் வீட்டில் நுழைந்த போலி வருமான வரித்துறை அதிகாரிகள் பணம், நகை எவ்வளவு இருக்கிறது என்று கேட்டவுடன் அவர்களின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்ட மத போதகர் நோவா அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டுள்ளார். வருமான வரித்துறையினர் என கூறிக்கொண்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் அடையாள அட்டை கேட்டதால் ஆத்திரமடைந்த போலி வருமான வரித்துறையினர் மத போதகரை தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: 'செந்தில் பாலாஜி தன்னுடன் மு.க.ஸ்டாலினையும் சிறைக்கு கூட்டிப் போவார்' - ஷியாம் கிருஷ்ணசாமி சர்ச்சை பேச்சு
மத போதகரின் மனைவி கூச்சலிட்டதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு போலி வருமான வரித்துறை அதிகாரிகளை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் காரில் தப்பிச் சென்றனர். தப்பி ஓடியபோது அதில் ஒருவரை பிடித்து அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கி குடியாத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் இவர் மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் மத போதகர் வீட்டை ஒரு வாரமாக நோட்டமிட்டு வருமான வரித்துறை எனக் கூறி சோதனை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் குடியாத்தம் காவல் துறையினர் தப்பி ஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகிறது. மத போதகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் கொடிகட்டி பறக்கும் ஹவாலா பிஸ்னஸ்.. ரூ.3.37 கோடி பணம் சிக்கியது எப்படி?