வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மத்திய, மாநில அரசுகளின் புதிய கல்விக் கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உருது மொழி வழியிலான பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.
உருது பள்ளிகளை ஆய்வு செய்து வந்த அலுவலர்களின் பணியிடங்களும் காலியாக்கப்பட்டு அந்த பள்ளிகளை கண்டும் காணாமல் தானாகவே அழியக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக தெரிவித்தனர். உருது மொழி வழி பள்ளிகளை யார் ஆய்வு செய்வார்கள் வளர்த்தெடுப்பார்கள் என்பதை பள்ளிக் கல்வித்துறை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், உருது மொழியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதுவதற்கு நீதிமன்றங்களுக்கு சென்று தான் உத்தரவு பெற்று தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை உள்ளதையும் சுட்டிக்காட்டினர். உருது மொழி பள்ளிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையில் அரசு பார்ப்பதற்கு இதைவிட சாட்சி வேறு எதுவும் இல்லை என்றனர்.