வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (மார். 02) மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தேர்தல் செலவினங்கள் என்ற அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்படும் பொருள்கள், உணவுகளுக்கான விலை பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசுகையில்,‘‘மைக் செட், ஆம்ளிபயர், ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றின் வாடகை அதிகமாக உள்ளது. நீங்கள் கொடுத்துள்ள வாடகை பட்டியலை வைத்து இரண்டு நாளில் பரப்புரை செய்தாலே தேர்தல் ஆணையம் கூறியுள்ள செலவுத் தொகை வந்துவிடும்’’ என்றனர்.
தொடர்ந்து ‘‘நகரத்தில் பூரி செட் விலை 45 ரூபாயாகவும், கிராமங்களில் 35 ரூபாயகவும் உள்ளது. இது மிகவும் அதிகமாக உள்ளது. மற்ற உணவுகளின் விலையையும் குறைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த ஆட்சியர், ‘‘விலைப் பட்டியல் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோடீஸ்வர எம்எல்ஏக்கள் - கடந்த தேர்தல் ஒரு பார்வை!