வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 40 குடிநீர் ஆலைகள் இருப்பதாகவும் இதில் 37 நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் செயல்படுவதாகவும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடந்த இரண்டு நாள்களாக 37 நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் பணிகளை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை 29 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மாலைக்குள் மீதமுள்ள எட்டு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அருவி என்கின்ற குடிநீர் ஆலைக்கும் இன்று அலுவலர்கள் சீல் வைத்தனர். இந்த அருவி ஆலை திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்த ஆலை உரிமம் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் பெயரில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துரைமுருகன் திமுக ஆட்சியின்போது பல வருடங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் எனவே சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக இருந்த ஒருவர் இதுபோன்று உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக குடிநீர் ஆலை நடத்தி வரும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி