வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் காத்தவராயன் வெற்றிபெற்றார். இந்நிலையில், குடியாத்தத்தில் சட்டபேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக அமைச்சர்களும் அவரைச் சார்ந்துள்ளவர்களும் நிலைகுலைந்து போயுள்ளனர் எனத் தெரிவித்தார். எனவே அரசு நிர்வாகத்தில் என்ன நடத்திறது என்பதே அவர்களுக்கு தெரியவில்லை எனக் கூறிய துரைமுருகன், இதனால் தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்னைகள் கிடப்பில் கிடப்பதாக சாடினார்.
இதனையடுத்து கோடை விழா பற்றி பேசிய அவர், "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி இடுப்பில் வை" என்று கிராமங்களில் கூறுவது போல, உயிர் போகிற பிரச்னையான குடிநீர் பிரச்னையைப் பற்றி கவலைப்படாத அதிமுக அரசு கோடை விழாவைப்பற்றி எப்படி கவலைப்படுவார்கள்? ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.
தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு முழுக்காரணமும் முதல் காரணமும் அதிமுகதான் என்று குற்றம்சாட்டினார்.