தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருந்த நிலையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணம் பறிமுதல் அதிகம் நடைபெற்றதைக் காரணம் காட்டி இந்நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 10 லட்சம் ரூபாய் கைப்பற்றினர்.
பின்னர், சில தினங்கள் கழித்து நடைபெற்ற சோதனையில், துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமெண்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. அதன் மதிப்பு சுமார் 10 கோடியே 53 லட்சம் ரூபாய் எனத் தகவல்கள் தெரிவித்தன. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, எதிர்க்கட்சிகளை முடக்கும் செயல் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. சட்டவிதிகளின்படி இப்பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்தது.
இன்று மாலை பரப்புரை ஓய்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்அடிப்படையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கள் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன், 'தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல் மிகப்பெரிய ஒரு ஜனநாயகப் படுகொலை இந்த நாட்டின் முதலமைச்சர் பெண்கள் கையில் நோட்டீஸ் கொடுத்து பக்கத்தில் இருப்பவர்களிடம் பணத்தை வாங்கி கையில் கொடுக்கிறார் இதை தொலைக்காட்சியில் பலதடவை போட்டுக் காண்பித்தார்கள் திருப்பித் திருப்பி முதலமைச்சர் பணம் வாங்கிக் கொடுக்கிறார் அதை பற்றி கேட்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு மனம் வராது தேனியில் பணத்தை வாரி வாரி கொடுத்ததை ஊடகங்களில் செய்தி போட்டார்கள். அது அவர்களுக்கு தெரியவில்லை.
ஆனால் எங்கள் மீது எந்தவிதமான நேரடியான குற்றச்சாட்டு இல்லாமல் எங்களை எந்த விளக்கமும் கேட்காமல் அவர்களாகவே ஒரு முடிவெடுத்துள்ளனர். இது திட்டமிட்ட ஒரு சதி எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களுக்கு மோடி அரசு உத்தரவிட்டிருக்கிறது தவிர எதிர்க்கட்சி மீது நடவடிக்கை எடுப்பதற்கு இல்லை.
மீதம் உள்ள 39 தொகுதிகளிலும் மக்கள் இந்த அரசுக்கு பாடம் புகட்டுவார்கள். இப்போதான் அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்குமேல் எங்கள் வழக்கறிஞர்கள்தான் பேசி நடவடிக்கை எடுப்பது குறித்து தெரிவிப்பேன்' என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆனால் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரோ, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடைய வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை எனத் தெரிவித்துள்ளார்.