வேலூர்: குடியாத்தத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை நாய் கடித்தததில் அவர் படுகாயம் அடைந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 45). இவர், வீட்டிற்குள் படுத்து உறங்கிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது, அவரது வீட்டிற்குள் தெரு நாய் ஒன்று நுழைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய், கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மல்லிகாவின் கால் விரல்களை கடித்துள்ளது. மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் நாயை அடித்து துரத்தினர். இதில் படுகாயம் அடைந்த மல்லிகாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மல்லிகாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக குடியாத்தம் பகுதியில் நாய்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக நகர் மன்ற கூட்டத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும், நகராட்சி அதிகாரிகள், கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிகாரிகள் நகர்மன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தி வருவதனால் தான் இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்றும், அதனால் நகராட்சி அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் தெரு நாய்களால் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு முன்பு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்.. நடிகர்கள் ஜிபி முத்து, ரக்சன் பங்கேற்று அமர்க்களம்..