Tamil Nadu Latest News Updates: வேலூர் சட்டக் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் மாணவியர் விடுதியை உடனடியாகத் திறக்கக்கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் காட்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் இன்று திடீரென வேலூர் சட்டக்கல்லூரியில் கட்டப்பட்டுவரும் மாணவர் விடுதியை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் விடுதியை இன்னும் திறக்காததற்கான காரணம் என்ன என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அலுவலர்கள், கட்டடப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் மின் இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் இனிமேல்தான் செய்யப்படவிருக்கிறது என்றும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், 2017இல் அனுமதிக்கப்பட்ட இந்த விடுதியை தற்போதுவரை கட்ட முடியவில்லை என்றால் இதைவிட கேவலம் ஒன்றும் இல்லை என்றார். ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி பொதுப்பணித் துறை அலுவலரிடம் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டதாகவும் பொதுவாக அரசு நிர்வாகத்தில் தான் தலையிடுவதில்லை என்றும் கூறினார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை தான் கொண்டுவந்ததாகவும் ஆனால் இன்று அங்கே என்ன நடக்கிறது என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறினார். புதிய துணைவேந்தர், பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இவர்கள் இருவரும் எந்தத் தகவலும் தனக்கு அளிப்பதில்லை, அங்கு ஊழல்கள் ஊற்றெடுப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது என்றார்.
எந்தப் பணியை செய்தாலும் பொதுப்பணித் துறைதான் செய்ய வேண்டும் என்றிருக்க, தனிப்பட்ட நபர்களைக் கொண்டு கமிஷன் நோக்கில் வேலைகள் நடக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரத்தை விரைவில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவருவேன் என்றும், தங்களை ஆளுநரே நியமித்தார் தாங்கள் யாருக்கும் தலைவணங்கத் தேவையில்லை என்ற மதமதப்புடன் இருப்பார்கள் என்றால் மக்களைத் திரட்டி ஊழலை சந்தி சிரிக்க வைப்பேன் என்றும் பகிரங்கமாக எச்சரித்தார்.
ஆண்டவனால் நியமிக்கப்பட்டால் கூட கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது என்றும் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.