திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மக்களவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழா மாவட்டக் கழக பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஏ.வ. வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வ. வேலு, "திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியானது ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. பொதுமக்களின் நலன் கருதியே திருப்பத்தூரில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம், ஜோலார்பேட்டை இடையேயான ரயில்வே பாதை அமைப்பதற்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அது குறித்து மக்களவைக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர் சி.என். அண்ணாதுரை கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கான இடத்தை கையகப்படுத்துவதில் அரசு மெத்தனம் காட்டுகிறது. உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி இந்த ரயில்வே இருப்புப் பாதை அமைப்பதற்கு அரசு முழு மூச்சில் செயல்பட வேண்டும். புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
வார்டு வரையறை செய்யப்படாமல் ஒருபோதும் தேர்தலை நடத்த முடியாது. இந்தப் பணியானது நான்கு மாதங்களில் நிறைவு பெறும். நிறைவு பெற்ற பின்னரே தேர்தலை நடத்த முடியும். இந்தத் தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன் பிறகே முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை கண்டு திமுக பயன்படுகிறது என்ற கேள்விக்கு, ஜெயித்தாலும் தோற்றாலும் திமுக ஒருபோதும் எதைக் கண்டும் அஞ்சப் போவதில்லை என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் வீட்டு வாசலில் காரை நிறுத்தி அயர்ந்து தூங்கியவரால் சலசலப்பு!