மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் அண்ணா கலையரங்கம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ' குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் எளிதில் நிறைவேற்றி விட்டார்கள். ஆனால் மாநிலங்களவையில் வரும்போது சற்று சிக்கல் ஏற்பட்டது. அப்போது அதிமுக ஆதரவு தெரிவித்ததால் அங்கேயும் சட்டம் அமலுக்கு வந்தது ‘ என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ' வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டாலும் கூட அதிகளவு தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி, எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே குடியுரிமை சட்டத் திருத்தம் அமலுக்கு வர அதிமுக தான் காரணம்' என்றார்.
இதையும் படிங்க: