வேலூர் மண்டிவீதியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்.
இந்த மாநாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று அறிவிக்க வலியுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா," இந்தியா முழுவதும் மறைமுகமாக என்ஆர்சியை அமல்படுத்துவதற்காக என்பிஆரை கொண்டு வந்துள்ளனர்.
இதனை 12 மாநிலங்கள் ஏற்க மறுத்துள்ளன. தமிழ்நாடு அரசும் இதனை நடைமுறைப் படுத்தக்கூடாது. இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். மத்திய ரிசர்வ் வங்கி இந்தப் போராட்டங்களை அலட்சியம் செய்யும் வகையில் என்பிஆர் ஒப்புகைச் சீட்டு தரவேண்டுமென்று கோரியுள்ளனர். இதனைக்கண்டித்து வருகின்ற 22ஆம் தேதி சென்னையில் மத்திய ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, " சுதந்திரம் அடைந்து 70ஆண்டுகளுக்குப் பிறகு நீ ஒரு இந்தியனா என்று ஒருவரைப் பார்த்து கேட்பது அவமானம். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்தவர்களுக்கு குடியுரிமை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் 19 லட்சம் பேர் குடியுரிமை இல்லாதவர்களாக மாறுகிறார்கள். அதில் ஒன்பது லட்சம் பேர் இந்துக்கள், பத்து லட்சம் பேர் இஸ்லாமியர்கள். இவர்களை வேறுநாட்டிற்கு அனுப்ப முடியுமா? அதற்கு வாய்ப்புள்ளதா? மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்று மத்திய அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது" என்றார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்த கூட்டணி என்று ஜெயக்குமார் தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த அவர், "அதிமுகவில் செல்லூர் ராஜூ மட்டுமே விஞ்ஞானி என நினைத்தோம். தற்போது ஜெயக்குமார் அவர்களும் ஒரு விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி!