வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே பீஞ்சமந்தை மலை கிராம மக்களுக்கு சமூக பாதுகாப்புத் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி என 24 துறைகள் சார்பில் 4 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரம் 788 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அணைக்கட்டு சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ஏ.பி நந்தகுமார், "நான்கு கோடி மதிப்பில் இந்த பகுதி மக்களுக்கு வழங்கப்படும் நலதிட்ட உதவிகள் தேவையில்லை. பதிலாக சாலை அமைத்துக் கொடுத்திருக்கலாம். இந்த பகுதிக்கு முக்கிய தேவையான சாலை வசதி செய்து தரக்கோரி இதுவரை பத்து முறை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளேன்.
கடந்தாண்டு அமைச்சரிடம் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை வைத்தேன். மூன்று மாதத்திற்குள் அமைத்து தருவதாக சொன்னார். ஆனால் அவரது தொகுதியில் உள்ள வாணியம்பாடி நெக்னாமலை பகுதிகளுக்கு மட்டும் மக்கள் செல்ல 40 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்க பூமி பூஜை போட்டுள்ளார் அமைச்சர். மாறாக பீஞ்சமந்தை என் தொகுதி என்பதால் என்னவோ சாலை அமைக்கும் பணியை செய்து கொடுக்கவில்லை.
தற்போது சாலை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கும். சாலை அமைக்கும் பணியை வனத்துறையே செய்தால் சிறப்பாக இருக்கும்" என்றார்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வீரமணி, "மலை கிராம மக்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறது. அடிப்படை வசதியான சாலை வசதி கூடிய விரைவில் அமைத்து தரப்படும். தேர்தலின்போது மின்சாரத்துறை அமைச்சர் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் சாலை நிச்சயம் அமைத்துத் தரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அம்மாவின் அரசு நிறைவேற்றியுள்ளது" என பேசிய போது இடைமறித்த எம்எல்ஏ நந்தகுமார், "இரட்டை இலை என பேசினால் நாங்களும் உதயசூரியன் என பேச வேண்டியிருக்கும். கட்சி ரீதியாக அரசு விழாவில் பேச வேண்டாம் என கடிந்துகொண்டதற்கு அமைச்சர் வீரமணி, "நான் பேசியதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்" எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.