வேலூர்: விருப்பாட்சிபுரம், சாய்நாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேமுதிக கொடியேற்றும் நிகழ்வுகளில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கொடி ஏற்றினார். பின்னர் வேலுாரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை யாரும் எங்களிடம் பேசவில்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்படும். வேட்பாளர்களையும் முறையாக கட்சி தலைமை அறிவிக்கும். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளது.
மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கொலைகள் நடக்கிறது, இதற்கு காரணம் டாஸ்மாக் கடைகள் மற்றும் கஞ்சா தான். கடமையை செய்யும் அரசு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பத்து ரூபாய் செந்தில் பாலாஜி ஊழல் செய்ததால் ரெய்டு வந்தது. அப்போது அதிகாரிகளைத் தாக்கி அவர்கள் வாகனங்களை சேதப்படுத்தியது தவறு.
தமிழ்நாடு அரசுக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மக்கள் என்றால் அரசு மருத்துவமனை, அமைச்சர் என்றால் தனியார் மருத்துவமனையா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதலமைச்சர் எத்தனை தொழிற்சாலைகளை கொண்டு வந்தார். வருமானம் இல்லாத டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு சுமார் 500 கடைகள் மூடியதாக கணக்கு காண்பிக்கிறார்கள். இதே வேலுார் மாவட்டத்தில்தான் குடிப்பழக்கத்தை எதிர்த்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? திமுக எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்கின்றனர். கோவை பெண் பஸ் டிரைவர் விவகாரத்தில் பஸ்சில் டிக்கெட் வாங்க காசு இல்லாமல் கனிமொழி பயணம் செய்துள்ளார். தற்போது தமிழ்நாட்டில் பெண் முதலமைச்சர் அமைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். சுமார் 40 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்த விஜயகாந்துக்கே மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், :தமிழ்நாடு அரசு 'மத்திய அரசு அறிவித்தபடி' என மின் கட்டணத்தை உயர்த்துகின்றனர். ஏனென்றால், இவர்கள் மீது தவறு தவறு வரக்கூடாது என இதுபோல அறிவிக்கின்றனர். பத்து ரூபாய் டாக்டர் பார்த்திருக்கிறோம், ஆனால் தற்போது பத்து ரூபாய் பாட்டில் மேல் உயர்த்தி பத்து ரூபாய் பாலாஜி என பெயர் பெற்றுள்ளார், செந்தில் பாலாஜி. மேலும் திமுக ஆட்சியில் அனைத்துமே அரசியலாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் பெண் ஓட்டுநர்கள் இருந்துள்ளார்கள். அப்போதெல்லாம் கமல்ஹாசன் கார் கொடுக்கவில்லை. இது எல்லாமே அரசியல்தான். மேலும் நீட் தேர்வுக்காக உயிர் நீத்த அனிதா குறித்து திமுகவினர் மிகப்பெரிய அரசியல் செய்தனர்.
ஆனால் மதுபானத்திற்காக வேலூரில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து திமுகவினர் கண்டு கொள்ளவில்லை. மக்களின் வாழ்வு மிகப்பெரிய கேள்விக்குறியாக போய்க் கொண்டுள்ளது. இவை மாற வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை