வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கண்டுபிடித்து மீட்கப்பட்ட ரூ.75.47 ஆயிரம் மதிப்பிலான 372 கைப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 1 கோடியே 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 225 பவுன் தங்க நகைகள், சுமார் ரூ.72 ஆயிரம் மதிப்புடைய 1.017 கிலோ வெள்ளி நகைகள், ரூ.48 லட்சம் மதிப்புடைய 7 நான்கு சக்கர வாகனங்கள், ரூ.9 லட்சம் மதிப்புடைய 4 மூன்று சக்கர வாகனங்கள், ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 70 இருசக்கர வாகனங்கள், ரூ.13.80 லட்சம் ரொக்கப் பணம், சுமார் ரூ.17 லட்சம் மதிப்புடைய 150 கைப்பேசிகள் என மொத்தம் ரூ.2 கோடியே 32 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புடைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (டிச.30) நடைபெற்றது. வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி தலைமை வகித்து மீட்கப்பட்ட நகைகள், வாகனங்கள், கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும், இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட போலீசார் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “வேலூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும், 2023ஆம் ஆண்டில் கொலை, ஆதாய கொலை, கொலை முயற்சி, திருட்டு போன்ற அனைத்து குற்றச்செயல்களும் குறைந்துள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சட்ட ஒழுங்கினை சிறப்பாக கையாண்டதன் காரணமாக, இத்தகைய நிலை எட்டியுள்ளது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டுக் குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதன் முறையாக வேலூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட செல் ட்ராக்கர் எனும் வசதி மூலம் திருடுபோன 522 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் நகைகள், வாகனங்கள் என மொத்தம் ரூ.3 கோடியே 8 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடித்து, உரியவர்களிடம் சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக முதலமைச்சருக்கு நாட்டு மக்களைப் பற்றி கவலை இல்லை - எடப்பாடி பழனிசாமி தாக்கு!