தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி, வேலூரில் இன்று (ஏப்ரல் 25) கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட சத்துவாச்சாரி, காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மண்டி தெரு ஆகிய இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லவில்லை. அவ்வழியாக வந்த ஒரிரு வாகனங்களையும் காவல் துறையினர் தணிக்கை செய்தனர்.
மருத்துவ சிகிச்சைக்காகச் செல்பவர்களையும், அத்தியாவசிய தேவைக்காகச் செல்பவர்களையும் மட்டும் காவல் துறையினர் அனுமதித்தனர். மற்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பிவருகின்றனர்.
இது மட்டுமின்றி கட்டுப்பாடுகளுடன் வசூர் தீர்த்தகிரி கோயிலில், திருமணம் நடைபெற்றது.