வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பேபிகலா (40). இவரது கணவர் சோமசேகர். இருவருக்கும் முதல் திருமணம் நடந்து விவாகரத்தான நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பின்னர் சோமசேகர் மற்றும் அவரது தாய் ஆகியோர் பேபிகலாவை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த மாதம் 19ஆம் தேதி பேபிகலா பாகாயம் காவல் நிலையத்தில் கணவன் மற்றும் மாமியார் மீது புகார் அளித்தார். அன்றைய தினமே பேபிகலா சென்னையிலுள்ள தாய் வீட்டிற்குச் சென்றார்.
இந்த நிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சோமசேகர் உயிரிழந்து விட்டதாகவும் மறுநாள் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் பேபிகலாவுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பேபிகலா, தனது கணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை உடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் இன்று (மே 07) 16 நாள்களுக்கு முன் புதைக்கப்பட்ட உடல் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: சாக்குமூட்டையில் கட்டி குப்பையில் வீசப்பட்ட ஆண் குழந்தை