வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதி ஒடுக்கத்தூர் அடுத்து அமைந்துள்ளது கல்லுட்டை கிராமம். இக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கான சுடுகாடு உத்திரகாவேரி ஆற்றுக்கு மறுபுரம் உள்ள சேர்ப்பாடி பகுதியில் உள்ளது. கல்லுட்டை கிராமத்தை சேர்ந்த யாரேனும் உயிரிழந்தால் உத்திரகாவேரி ஆற்றை கடந்து சென்றுதான் அடக்கம் செய்யவேண்டும்.
இந்நிலையில் கல்லுட்டை கிராமத்தை சேர்ந்த பட்டம்மாள்(90) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் நேற்று இறந்துள்ளார். அவரது உடலை சேர்ப்பாடியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய அக்கிராமத்தினர் தூக்கி சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அக்கரையில் உள்ள சுடுகாட்டை அடைய சாலை வசதி இல்லாததால் உத்திரகாவேரி காற்றில் தேங்கிய மார்பளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை ஆபத்தான முறையில் சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளனர். தங்கள் பகுதி சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி வேண்டும் என பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்லுட்டை கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.