வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்ட போது, லாரி ஓட்டுநர் முன்னுக்குப் பின்னாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் கன்டெய்னரைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் 52 நபர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது இவர்கள் 52 பேரும் உத்திரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்; சென்னையில் கூலித்தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த நிலையில் கன்டெய்னர் லாரி மூலம் ஊர் செல்ல முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இவர்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியைப் பறிமுதல் செய்து, 52 பேரையும் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் தங்க வைத்து, கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு இவர்கள் அனைவரையும் ரயில்கள் மூலம் அவரவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலூரில் கரோனா பாதித்து குணமடைந்த மூதாட்டி உயிரிழப்பு