வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தோலப்பள்ளி கடலைக்குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையா. இவர் தனது மாடுகளை வழக்கம்போல், மேய்ச்சல் நிலத்துக்கு கொண்டுசென்றுள்ளார்.
மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அவரது பசு ஒன்றின் வாய் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் சதை தொங்கியது.
இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் உடனடியாக வந்து காயமுற்ற பசுவுக்கு சிகிச்சை அளித்தார். இருப்பினும் வாயில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் பசு உயிருக்குப் போராடிவருகிறது.
இதற்கிடையே மாட்டின் உரிமையாளர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்குl் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுமாட்டின் வாய் சிதறியது தெரியவந்தது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை, வேட்டைக் கும்பல் வைக்கிறது. புல் மேயும்போது வாயில் சிக்கி வெடிப்பதால் ஆடு, மாடுகள் பலியாகின்றன.
வேட்டைக் கும்பலைக் கண்டுபிடித்து வனத் துறை, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஆனைக்கட்டி யானை உயிரிழப்பிற்கு நாட்டு வெடி காரணம் அல்ல' - மாவட்ட வன அலுவலர்