இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி, சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.
இதில், அரக்கோணம் மக்களவைத் தொகுதி, சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜாபேட்டையில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு எண்ணப்படவுள்ளன.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் காவல் துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 750 காவல் துறையினர், வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 650 காவல் துறையினர் என மொத்தம் 1400 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடபடவுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர இரண்டு மையங்களிலும் தலா ஒரு கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.