சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கொடிய கரோனா வைரஸ், கடந்த 15 நாள்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில், இந்த வைரஸ் பெருந்தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் போதிய விழிப்புணர்வின்றி வீதிகளில் சுற்றி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் கண்டிப்பான விதிமுறைகளை விதித்திருக்கிறது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 144 தடையையும் கடுமையாக கடைபிடித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் தற்போதைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பழைய பென்ட்லெட் மருத்துவமனை, சிஎம்சி தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் 535 படுக்கைகளும், 125 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன.
இதுதவிர மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் 35 படுக்கைகளை கேட்டுள்ளோம். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் சிகப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அவர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.
இதுவரை சந்தேகத்துக்கிடமான நபர்கள் என 9 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 7 பேருக்கு பாதிப்பு இல்லை என சோதனை முடிவு கிடைத்திருக்கிறது. மீதமுள்ள 2 பேரின் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்.
நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6.00 முதல் மதியம் 12.00 மணிவரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஆட்டோ, டேக்சி, இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் பயணித்தால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும், அதேபோல் தேவையில்லாமல் இரு சக்கர வாகனத்தில் 2 பேர் சென்றாலும் வண்டி பறிமுதல் செய்து ஏலத்திற்கு கொண்டு வரப்படும். மாவட்ட போக்குவரத்து ஆணையாளரிடம் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் பெட்ரோல் பங்குகள், காய்கறி, மளிகை கடைகள் ஆகிய அத்தியாவசிய கடைகள் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் மக்கள் தேவையான பொருட்களை சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
வேலூர் மாநகர மக்களின் சிரமம் போக்க வேலூர் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் தற்காலிக மார்கெட்டுகள் நாள்தோறும் செயல்பட வழிவகை செய்யப்படும். ஆகவே வேலூர் மாவட்ட மக்கள் கரோனா வைரஸ் தடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.