வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு டிசம்பர் மாதம் நடந்த செம்ஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முன்னதாக பல்கலைக்கழகம் மாதிரி தேர்வு முடிவு ஒன்றினை வெளியிட்டிருந்தநிலையில் தற்போது வெளியிட்டிருக்கும் தேர்வு முடிவு முற்றிலும் முரண்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதிரி தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றிருந்த மாணவர்கள் தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவில் தோல்வி அடைந்துள்ளனர். மாணவர்கள் பலர் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர். கல்லூரியில் அகமதிப்பீடு(internal) தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்களை செமஸ்டர் தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் சேர்த்து மதிப்பிட்டு தான் தேர்வு முடிவு கணக்கிடப்படும். கல்லூரிகளில் நடத்தப்பட்ட இண்டர்னல் தேர்வுகளில் எந்த மாணவரும் பூஜ்ஜியம் மதிப்பெண் பெறாத நிலையில், செமஸ்டர் தேர்வு முடிவில் பூஜ்ஜியம் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்வு முடிவுகள் எந்த முறையில் கணக்கிடப்பட்டது என மாணவர்கள், உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் முடிவுகளின் வரைவை அனுப்பிய பின்னர், அதை ரகசியமாக வைத்திருக்கவும், எழுத்துத் தேர்வு, அகமதிப்பீடு விவரங்கள் சரியாக இருந்தால் குறுக்கு சோதனை செய்யவும் அறிவுறுத்தியது.
பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்வு முடிவுகள் உறுதியாக உள்ளதா என்பதை அறிய, பல மாணவர்கள், குறிப்பாகப் பொருளாதாரப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரிகள், மறு மதிப்பீட்டுக்காக தாள் ஒன்றுக்கு ரூ.800 மறுமதிப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று கூறினர். "நான் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால் செமஸ்டரில் தேர்ச்சி பெறுவேன், ஆனால் ஒவ்வொரு தாளுக்கும் ரூ.800 பணம் எங்கிருந்து பெறுவது" என்று மாணவி ஒருவர் புலம்பினார்.
"பொதுவாக 80களுக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் செமஸ்டர் மதிப்பெண்கள் வெரும் ஒற்றை இலக்கங்கள் தான் என்பது தான் அதிர்ச்சிக்கான காரணம்" என்று ஒரு கல்லூரி பேராசிரியர் கூறினார்.
திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மதிப்பீட்டில் இருக்கும் போது, இரண்டாவது ரிசல்ட் எப்படி வெளியானது என்பது பேராசிரியர்களால் எழுப்பப்பட்ட மற்றொரு பிரச்சினை. இதுகுறித்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எம்.சந்திரனிடம் பிற கல்லூரி பேராசிரியர்கள் கேட்ட போதும் அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு பேரவை தலைவர் ஜி.லாங்கோ கூறுகையில், "ஏழை மாணவர்களின் உயிருடன் விளையாடும் பல்கலைக்கழகத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது" என தெரிவித்தார்.