வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கும் பணி வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 3,864 பேர் தகுதியற்ற நிலையில் முறைகேடாக கிசான் திட்டன் கீழ் நிதி பெற்றது கண்டறியப்பட்டுள்ளது.
தகுதியற்ற 339 நபர்கள் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 1.35 லட்சம் அளவிற்கு வசூல் செய்யப்பட வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையின் மூலம் இதுவரையில் 2685 தகுதியற்ற பணியாளர்களிடம் இருந்து ஒரு கோடியே 3 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கிசன் நிதி மீட்பு பணி நடந்து வருகிறது.
மீதமுள்ள 789 தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து முறைகேடாக பெறப்பட்ட ரூ. 19.6 லட்சம் அரசு நிதியை மீட்க வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் வீடு வீடாக சென்று நிதி பெற்றவர்களை சந்தித்து பணத்தை திருப்பி செலுத்த வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தகுதியற்ற பயனாளிகள் பணத்தை திருப்பிச் செலுத்த தவறினால் அவர்கள் மீது சட்டரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.