வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட, புதிய மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ரூபாய் 97 கோடி மதிப்பீட்டில் ஏழாயிரத்து 977 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ரூபாய் 296 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ”பழனிசாமி, 2018ஆம் ஆண்டு வார்டுகள் புதிய மறுவரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
புதிய மாவட்டங்கள் பிரிப்பதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருகிறார். ஆம்பூர் பிரியாணி மிகச் சிறப்பு வாய்ந்தது.
இவ்வழியாக வந்து செல்லும் மக்கள் கண்டிப்பாக ஆம்பூர் பிரியாணியை சுவைக்காமல் செல்வதில்லை. பொங்கல் பரிசாக அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பொருட்கள், நாளை முதல் வழங்கப்படும். 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடை முறைகளை கடைபிடித்துவருகிறது . விவசாயிகளின் நலன் காக்க தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் செயலாற்றுகிறது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது இதனை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 9 லட்சத்து 72 ஆயிரம் மனுக்களில், 5 லட்சத்து 11 ஆயிரம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதில் 25,000 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: உதயமாகிறது ராணிப்பேட்டை புதிய மாவட்டம் - விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அமைச்சர்!