வேலூர்: கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள நேற்று வேலூர் சென்றார். இரண்டாவது நாளான இன்று புதிய திட்டமான கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடக்கி வைத்து நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
முன்னதாக இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சத்துவாச்சாரி பாரதி நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர் நல மைய கட்டுமான பணியை ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நகரை வலம் வந்த முதலமைச்சர், சத்துவாச்சாரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள காலை சிற்றுண்டி தயாரிக்கும் மைய சமையல் கூடத்தை ஆய்வு செய்து சமையல் தயாரிக்கும் முறைகள் குறித்தும் முறையாக தயாரிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் உள்ள 41 மாணவர்கள் பயிலும் அரசு ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில் வகுப்பறைகளுக்கு சென்று பள்ளியை ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள ஆசிரியர்களிடம் பள்ளியின் நிலை குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அலமேலு மங்காபுரம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவை ஆய்வு செய்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உணவை பரிமாறினார். மேலும் உணவை உண்டு அதன் தரத்தையும் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஆசிரியர்களை கடிந்துகொண்ட ஆட்சியர் கவிதா.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன?