வேலூர் மாவட்டம், கஸ்பா அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர், பில்லா போஸ். இவர் நேற்று (மே.15) மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் அவரைத் தூக்க முயன்றுள்ளனர். மதுபோதையில் உதவி செய்ய வந்த இளைஞர்கள் மீது பில்லா போஸ் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவரை அடித்து விரட்டியுள்ளனர்.
பின்னர் பில்லா போஸ் தனது கூட்டாளிகளுடன் ஆயுதத்துடன் வந்து, அம்பேத்கர் நகர் பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதற்கிடையே பில்லா போஸுக்கு ஆதரவாக வேலூர் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் தன்வன்ராஜா ஆயுதத்துடன் வந்து பொது மக்களை மிரட்டி தாக்குதல் நடத்தி, அவதூறாகப் பேசியுள்ளார். இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் ஆயுதப்படை காவலர் தன்வன்ராஜாவை சிறைப்பிடித்து, வேலூர் தெற்கு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த காவலர்களிடம் ஆயுதப்படை காவலர் தன்வன்ராஜாவை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் கஸ்பா அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இரவு நேரத்தில் மதுபோதையில் ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : கரோனாவால் உயிரிழந்த முதலமைச்சரின் தம்பி!