வேலூர்: காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சார்லஸ் என்பவர் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளது. எனவே, புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய கடந்த ஏப்ரல் 21 அன்று சார்லஸின் செல்போனை பல்கலைக்கழக தரப்பில் இருந்து பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, தனியார் தமிழ் வார செய்தித்தாளின் ஆசிரியர் விஜய் என்பவர் சார்லஸுக்கு ஆதரவாக பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். தொடர்ந்து, உதவி பதிவாளர் பிரதீப் ராஜை ஆபாசமாக திட்டிய விஜய், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக தெரிகிறது.
அதன் பின்னர், கடந்த ஏப்ரல் 27 அன்று பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சிவக்கொழுந்துவிடம் சென்ற விஜய், சார்லஸின் செல்போனை அவரிடம் ஒப்படைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவரையும் ஆபாச வார்த்தைகளில் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தனியார் வார பத்திரிகை ஆசிரியர் விஜயின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பத்திரிகை ஆசிரியர் விஜய் மீது திருவலம் காவல் துறையினர் 105/23 மற்றும் 294 B 506/1 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Thiruvalluvar University: திருவள்ளுவர் பல்கலை. தேர்வு முடிவு குழப்பம்: பேராசிரியர்கள் மீது நடவடிக்கை!