திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், ஏ.ஐ.எம்.ஐ.எம்., மஜக உள்ளிட்ட கட்சியினர், ஜாமியதுல் உலமா அமைப்பினர் இந்திய தேசியக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவபொம்மைகளுடன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சட்ட நகலை தீயிட்டு எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் கோவையில் ஆத்துப்பாலம் பகுதியில் கேம்பஸ் ப்ராண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் சார்பாக குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், நேற்று டெல்லியில் ஜமியா மற்றும் உ.பி. மாநில அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி, அமித் ஷா ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் - ரயில்கள் ரத்து, இணைய சேவை முடக்கம்