வேலூர் சத்துவாசாரி வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுரங்க வழி பாதை அமைக்கும் பணிக்காக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் இன்று (நவம்பர் 11) பூமி பூஜை செய்து வைத்தார்.
அப்போது, வேலூர் மாவட்ட பாஜக தொழிற்சங்க பிரிவினர் சிலர் அக்கட்சி கொடியை ஏந்தினர். பாஜக கொடி இருப்பதை உணர்ந்த மாவட்ட ஆட்சியர், அரசு நிகழ்ச்சியில் கட்சிக் கொடி ஏந்துவதை தடுக்கும் படி காவலர்களிடம் கூறினார். உடனே, பாஜக நிர்வாகிகளிடம் காவலர்கள் பேசி கொடியை கீழே இறக்க கூறினர்.
ஆனால், சுரங்க வழி பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது என்றும் தங்களை ஏன் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்றும் பாஜகவினர் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.