வேலூர்: சத்துவாச்சாரியில் பாரதிய ஜனதா கட்சியின் வர்த்த பிரிவு வணிகர்கள் மாநாடு வர்த்தக பிரிவு மாநில செயலாளர் இளங்கோ தலைமையில் நடந்தது. இதில் பாஜக மாநில செயலாளர்கள் வெங்கடேசன், கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர் வி.கே சிங் மற்றும் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஜெகன் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன் திருப்பதி, "தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எமர்ஜென்சி நிலை ஏற்பட்டுள்ளதா என்ற அச்சத்தை மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார்.
செந்தில் பாலாஜியை கைது செய்த போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணை அமலாக்கத்துறை செய்த போது அவசர நிலை வந்து விட்டதோ என்று சொன்ன ஸ்டாலின் தொடர்ந்த தமிழகத்தில் பாஜகவை சேர்ந்தவர்களை அனுதாபிகளையும் முகநூல் மற்றும் ட்விட்டர்களின் பதிவு செய்தவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறார்.
கொடுமைப்படுத்துகிறார்கள், மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். செந்தில் பாலாஜியை சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்த போது சொன்ன வார்த்தைகள். சட்டம் இல்லாமல் சட்ட விரோதமாக பாஜகவை சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வருவது சர்வாதிகாரமான ஆட்சி ஸ்டாலின் செய்து வருகிறார்.
கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக கார்ட்டூன்ஈஸ்ட் பாலா அவர்களை கைது செய்த போது இதே ஸ்டாலின் ஜனநாயக விரோதமானது சர்வாதிகாரம் ஆனது என்று தெரிவித்தார். இப்போது ஸ்டாலின் அதை தான் செய்து வருகிறார். இதுவரை செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை. செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்யவில்லை இது ஜனநாயக விரோதமான செயல்.
2006 இல் இருந்து 2011 வரை பொன்முடி அமைச்சராக இருந்தபோது, அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தால், திமுக தமிழ்நாட்டின் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருந்தால், தமிழர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால், பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.
இதை செய்யாது இருப்பதால் திமுக ஊழலுக்கு துணை போகிறது. திமுக அரசு ஊழலுக்கு உடனடியாக உள்ள அரசு. திராவிட மாடல் என்றால் ஊழல் அரசு என்ற பெயரை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் முதலமைச்சர். கோவையில் சில நாட்களுக்கு முன்பு கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் அதாவது கம்யூனிஸ்ட் கட்சியினர் மிகவும் அவதூறாகவும் மோசமான வார்த்தைகளால் பிரதமரை விமர்சித்துள்ளனர்.
இரண்டு சீட்டுக்கு 15 கோடி வாங்கியவர்கள். 15 கோடி வாங்கியதற்காக திமுகவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் அடிமைகளாக உள்ளனர். மேலும் திமுகவைச் சேர்ந்த ராசாவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசி வருகிறார். திமுகவில் ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்து வருகிறார்கள். பொன்முடியை பொறுத்தவரையில் இந்நேரம் வரையில் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
எனவே திமுக உண்மை நிலையை அறிந்து கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அவர் பேச்சும், முதலமைச்சராக இருக்கும் ஒரு பேச்சு பேசி வருகிறார். நாட்டு மக்கள் இவரை நம்ப மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.