ராமநாதபுரம் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் விஜயசாமி என்பவரின் மூத்த மகன் மணிகண்டன் (36). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட சிறு விபத்தில் தன் இடது காலை இழக்க நேர்ந்து.
தொடர்ந்து, கல்வி பயில நாள்தோறும் மிதிவண்டியை ஒற்றை காலில் மிதித்துக்கொண்டே 10 கி.மீ பயணம் செய்து பள்ளிக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், மணிகண்டன் நாள்தோறும் மிதிவண்டியை ஒற்றைக் காலில் மிதித்துச் செல்லுவதை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டு வந்துள்ளனர்.
நாள்தோறும் தன் அன்றாட வாழ்வில் சிரமப்பட்டு கொண்டிருந்தபோது, வாழ்வில் ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மணிகண்டனின் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது. அப்போது, தான் ஒற்றை காலில் மிதிவண்டி மிதிப்பதை மற்றவர்கள் ஆச்சரியபடுவதை வைத்து நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
இதனைத் தொடர்ந்து, தன் முதல் பயணத்தை ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் உதவியுடன் தலை கவச விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தை 2008ஆம் ஆண்டு சிவகங்கை முதல் சென்னை வரை வெற்றிகரமாக முடித்தார். 2010ஆம் ஆண்டு தன் மாமன் மகள் தாமரைச்செல்வி என்பவரை மணமுடித்து, இவர்களுக்கு தற்போது விஜய சௌந்தர்யா (7). விஜய ஷாலினி (1) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பின்னர் 2013 ஆம் ஆண்டு சாலை விதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மற்றொரு மிதிவண்டி பயணத்தை ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மேற்கொண்டார். இவரது பயணத்திற்கு உறுதுணையாக பெற்றோர், உறவினர்கள் இருந்தாலும் மனைவி தாமரைச்செல்விக்கு சற்று மனக்கசப்பாகவே இருந்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கிய மணிகண்டன் பல தேர்வுகளை எழுதி வந்துள்ளார். ஆனால், தேர்வுகளின் மீது அதிக நாட்டம் செல்லாமல் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறவில்லை.
அதன் விளைவாக, மணிகண்டன் மதுரையில் மாற்றுத்திறனாளிகள் திறனாய்வு பட்டறையில் பயிலும்போது மாற்றுத்திறனாளி நண்பர்களான சுப்புராம் (21) செல்வகுமார் (24) ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்படி, மக்களிடையே காற்று மாசுபடுதலை தவிர்க்கவும், நதி நீர் இணைப்பு, மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, உடல் உறுப்பு தானம், இயற்கை விவசாயம், அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது, தலைக்கவசம் அணிவதன் அவசியம், பொது இடங்களில் சி.சி.டி.வி.கேமிரா பொருத்துதல், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுதல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள நினைத்தார்.
இதற்காக கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பயணத்திற்கான அனுமதி பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது இரு நண்பர்கள் இரு வாகனத்திலும், விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களுடன் தன் மிதிவண்டியில் மீண்டும் பயணத்தை தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து, மணிகண்டன் நேற்று மாலை ஆம்பூர் வந்தடைந்தார். பயணத்தின் போது வழியெங்கும் மக்கள் நல்ல ஆதரவு கொடுத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வரும் ஜனவரி 1ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தனது பயணத்தை முடித்து முதலமைச்சரிடம் தன் பயணத்திற்கான மனுவை அளிக்கப்போவதாக தெரிவித்தார்.
மூன்று வேலை உணவுக்காக 85 வயதிலும் ஓயாத பயணம்...இதையும் படிங்க: