வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு, 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து சீர்வரிசைகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிலோபர் கபில், ”ஜெயலலிதா 1991ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். இதற்காக தொட்டில் குழந்தைத் திட்டத்தை கொண்டு வந்தார். சிசுக்கொலை தடைச் சட்டத்தை 1994ஆம் ஆண்டு கொண்டு இயற்றினார். அதன்பிறகுதான் பெண் சிசுக் கொலைகள் தமிழ்நாட்டில் குறைந்தது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பெண்களின் முன்னேற்றத்திற்காக அதிமுக அரசு தொடர்ந்து கர்ப்பமான பெண்களுக்கு சத்தான தானிய வகைகள், பேரீச்சம் பழம் போன்றவைகளை வழங்கிவருகிறது. ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்வதற்காக அனைத்து கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை அரசே ஏற்று நடத்தி வருகிறது” என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.