வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் மனித வணிகம் மற்றும் மனித கடத்தல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சியரங்கம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், லோக் அதாலத் தலைவர் குணசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய வேலூர் மாவட்ட லோக் அதாலத் தலைவர் குணசேகர், ‘தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் 2016ஆம் ஆண்டு 8,132 மனித கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் இருந்து 15 ஆயிரத்து 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு மட்டும் குழந்தை வணிகம் மூலம் சட்டத்திற்கு புறம்பாக ரூ.11,000 ஆயிரம் கோடி வருவாய் குற்றவாளிகளுக்கு கிடைத்துள்ளது. இதேபோல், பாலியல் வணிகம் மூலம் 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே வருவாய் நோக்கத்திற்காக மனிதர்கள் கடத்தப்படுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், 'வேலூரில் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காக காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. வேலூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மனிதக் கடத்தல், கொத்தடிமைகள் மீட்பு, குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.