ராணிப்பேட்டை மாவட்டம், மேல் விஷாரத்தை சேர்ந்த பீடி தொழிலாளி சலீம் என்பவரது மகள் குப்ரா(18). இவர் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், இவர் உறவினர்களுடன் துணி எடுப்பதற்காக வேலூர் நோக்கி ஆட்டோவில் சென்றார்.
அப்போது அவர்கள் சென்ற ஆட்டோ கியர் பாக்ஸ் உடைந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் அடியில் சிக்கிக்கொண்ட குப்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆட்டோவில் பயணம் செய்த இளம் பெண்ணின் உறவினர்கள் நான்கு பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் உடலை கைபற்றி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் ஏப்.10 நான்காம் கட்ட வாக்குப்பதிவு!