வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை எதிரே காந்தி சாலையிலுள்ள காசி விஸ்வநாதர் கோவில் தெருவில் ஏப்ரல் 29 நள்ளிரவு 1.30 மணியளவில் இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும்படியாகச் சுற்றித்திரிந்துள்ளனர்.
மேலும் இளைஞர்கள் இருவரும் ஒவ்வொரு வீடாக நோட்டம் பார்ப்பதுபோல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அச்சமயம், அங்கிருந்த நாய்கள் அவர்களைப் பார்த்து குரைத்துள்ளது. ஆத்திரமடைந்த இளைஞர்கள் தங்களின் கையிலிருந்த ஆயுதங்களால் நாய்களை விரட்டி தாக்கியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்து ஓடிய நாய்களை, அந்த இளைஞர்கள் விடாமல் துரத்தி தாக்கியபடியே அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்றனர். தற்போது இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பான கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. கொள்ளையர்கள் போன்று இருந்ததால் அச்சம் அடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் காட்சியில் பதிவான நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் கொள்ளையர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் கூறுகையில், "சிசிடிவி காட்சியில் பதிவான அந்த இரு இளைஞர்களும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள். இரவில் வந்தபோது, தங்களைப் பின் தொடர்ந்து விடாமல் நாய்கள் குரைத்ததால் நாயை தாக்கி விரட்டியுள்ளனர்.
அவர்கள் கொள்ளையர்கள் கிடையாது. இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரித்து அனுப்பி இருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: காட்டுக் கோழிகளை பிடிக்க முயன்ற வடமாநில தொழிலாளர்கள்: அபராதம் விதித்த வனத்துறை!