தமிழ்நாட்டில் பல்வேறு பண்டிகைகள் வந்தாலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள். இந்த பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொங்கல் வைக்க பயன்படுத்தும் மண்பானை தயாரிக்கும் பணி, வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இவர்கள் முதலில் பானைகள் செய்வதற்கு முறையாக மண்ணை குழைத்து பக்குவப்படுத்துகின்றனர். பின்னர் பழைய முறைப்படி சக்கரத்தின் உதவியோடும் தற்போதைய நவீன இயந்திரத்தின் உதவியோடும் மண்பானைகளை தயார் செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியும் இங்கு நடைபெறுகிறது.
இந்தத் தொழில் குறித்து பார்வையற்ற மண்பாண்ட தொழிலாளி உமாபதி கூறுகையில், பல வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த 13 வருடங்களாக தனக்கு கண் பார்வை போய்விட்டது என்றும் இருப்பினும் தொடர்ந்து மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள் செய்து வருவதாகவும் தற்போது பொங்கல் விற்பனை மந்தமாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாகரிக வளர்ச்சியால் நலிவடைந்து வரும் இந்தத் தொழிலுக்கு மூலதனமாக இருக்கின்ற மண்ணுக்கே திண்டாடுவதாக தெரிவிக்கும் தொழிலாளிகள், காலங்காலம் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் தங்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை என்று வருந்துகின்றனர். அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தத் தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றும் செய்கூலிக்கு தகுந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளிகளுக்குதான் இந்த பாதிப்பு என்றால், மஞ்சள் விளைவிக்கும் விவசாயிகளுக்கோ மற்றொரு பரிதாபம்.
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக கணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் கிழங்கை பயிரிட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு பயிரிடப்படும் இந்த மஞ்சளானது தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
இதுகுறித்து மஞ்சள் விவசாயி அன்பு கூறுகையில், இங்கு உற்பத்தி செய்யும் மஞ்சளை ஈரோடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் இதன் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே வேலூர் மாவட்டத்திலேயே ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்றும் இதுதவிர மழை காலங்களில் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு செடிகள் காய்ந்து விடுகிறது இதன் காரணமாகவும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார். மேலும் உரிய விலை இல்லாமல் பாதிக்கப்படும் மஞ்சள் விவாசயிகள் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசில் ஒன்றாக மஞ்சளையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படியுங்க: சமத்துவ பொங்கல் - அசத்திய கல்லூரி மாணவிகள்!