வேலூர்: அசாம் மாநில அரசு சார்பில் அம்மாநில நோயாளிகள், மாணவர்கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில், வேலூர் சத்துவாச்சாரியில் “அசாம் பவன்” என்ற தங்கும் விடுதி ரூ.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 340 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் அமைந்துள்ள இந்த விடுதி கட்டடத்தில் பல்வேறு நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.
அந்த வகையில், இந்த விடுதி கட்டடத்தை அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று (செப்.26) திறந்து வைத்து, மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “அசாம் மாநிலத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், எங்கள் மாநில மக்கள் வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காகவும், கல்லூரிகளில் பயில்வதற்காகவும் வேலூருக்குத்தான் வருகின்றனர்.
அவர்களின் நலனுக்காக வேலூரில் தங்கும் மையம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் 10 தலைநகரங்களிலும் அசாம் மாநில நோயாளிகள், மாணவர்கள் பயன் பெறும் வகையில் தங்கும் மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த தங்கும் மையங்கள் கல்விக்காகவும், சிகிச்சைக்காகவும் வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில், மிகவும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. “அசாம் பவன்” திட்டம் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு, ரூ.22.83 கோடியில், இந்த கட்டடம் இப்போது 4 ஆயிரத்து 340 சதுர மீட்டர் பரப்பளவில், G+service+6 மாடிக் கட்டமைப்பாக உள்ளது.
இந்த நவீன வசதியானது VVIP மற்றும் VIP அறைகள், 40 இரட்டை படுக்கை அறைகள் மற்றும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி தங்குமிடங்கள் உள்பட பல்வேறு தங்குமிட விருப்பங்களை வழங்குகிறது. இது அனைத்து விருந்தினர்களுக்கும் வசதியான தங்குமிடத்தை உறுதி செய்கிறது.
அசாம் மாநில நிதியைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற தங்கும் மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் இரண்டு தங்கும் மையங்கள் பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும்” என்றார். இந்நிகழ்ச்சியில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத், சி.எம்.சி இயக்குநர் விக்ரம் மேத்யூ, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, அசாம் மாநில உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 10 சக்கர வாகனங்களில் கேரளாவிற்கு கனிமம் கொண்டு செல்வதற்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு!