வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 35 வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (பிப்.11) மாநிலத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு என்று மஞ்சள் தூளுக்கு பதிலாக மரத்தூளையும், மிளகிற்கு பதிலாக பருத்தி கொட்டையையும் கொடுத்தனர். வெல்லத்தை பக்கெட்டில்தான் கொண்டுவந்தோம். சில இடங்களில் பொங்கல் பரிசாக பல்லி போன்ற 'நான் வெஜ்' பொருள்களும் இருந்தன. பொங்கல் பரிசை சாப்பிட்டு தப்பித்து வந்துவிட்டோம்.
கோபாலபுரத்தைப் போல், வேலூரிலும் ஒரு வாரிசு அரசியல் மாடல் உள்ளது. தமிழ்நாட்டில்தான் நீட் தேர்வு வருவதற்கு முன்பே மிக அதிகமாக தனியார் கல்லூரிகள் இருந்தன. முந்தைய திமுக ஆட்சி காலத்தில் மட்டும் சுமார் 14 தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இந்த தனியார் கல்லூரிகளில் நடைபெற்ற கல்வி கொள்ளையை நீட் உடைத்துள்ளது. திமுக கதை, திரைக்கதை எழுதி ஆட்சிக்கு வந்து நாடகம் ஆடக்கூடியவர்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது கரோனா தடுப்பூசி குறித்து விமர்சனம் செய்தவரே தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கமல் ஒன்று சினிமாவில் இருக்க வேண்டும் அல்லது அரசியலில் இருக்க வேண்டும். நடுவில் இருப்பது அரசியலுக்கு நல்லதில்லை. வேட்பு மனுவை வாபஸ் வாங்காத பாஜக வேட்பாளர்கள் வீடுகள் முன்பு பள்ளம் தோண்டப்பட்டு, நீர் நிறுத்தப்படுகிறது. இதை எதிர்த்து பேசினால் எங்கள் மீது குண்டு போடுகிறார்கள்.
நீங்கள் ஹெலிகாப்டரில் வந்து குண்டு போட்டாலும், நாங்கள் கொள்கையில் இருந்து துளியும் மாற மாட்டோம். சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறுவது என்பது இவர்கள் (ஆளும் கட்சி) கையில்தான் உள்ளது. இவர்களின் ஆட்சியைப் பொறுத்தது. இதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித் தலைவர் வினோஜ் ட்விட் பதிவு தொடர்பான வழக்கு : கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு