வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 36 வார்டுகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் குப்பைகளைச் சேகரித்து கன்னிகாபுரம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு மினி லாரி மூலம் கொண்டுசெல்வது வழக்கம்.
இந்நிலையில் ஆம்பூர் நகராட்சிக்குள்பட்ட 18ஆவது வார்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த ஒருவார காலமாக குப்பைகள் அகற்றப்படாமல் கொசுத் தொல்லைகள், துர்நாற்றம் வீசுவதாக குற்றஞ்சாட்டிய அப்பகுதி மக்கள், ஒன்று சேர்ந்து குப்பைகளை சேகரித்து ஆட்டோ மூலம் கொண்டுசென்று நகராட்சி அலுவலகத்தில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குவந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அலுவலர்கள் நகராட்சி குப்பை வண்டியை கொண்டுவந்து அந்தக் குப்பையை அகற்றி தற்போது அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிக்க: குடியிருப்பில் சூழ்ந்த மழைநீர்; காகிதக்கப்பல் விட்டு நூதன முறையில் எதிர்ப்பு