வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கரும்பூர் கிராமத்தில் நாற்தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கிணற்றை சோதனை செய்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உதவியோடு கிணற்றில் மிதந்த சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கிணற்றில் இறந்து கிடந்தவர் அதேப் பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (32) என்பதும், கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற திருவிழாவின்போது குடிபோதையில் தன் நண்பர்களுடன் நடமாடுகையில், காவல்துறையினர் தாக்குதலுக்கு பயந்து ஓடிவந்த போது, கால்தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
ஜெயமூர்த்தியை அவரது உறவினர்கள் ஐந்து நாட்களுக்கும் மேலாக தேடியும் கிடைக்காத நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.