வேலூர் கோட்டையினுள் புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயமும், கோட்டையின் அகழி ஆகியவைகளும் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ளது. இதனை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தைக் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியானது.
அவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் கோயில் சென்றால் முறையாக பூஜைகள் நடைபெறாது, கோயில் விழாக்களும் முறையாக நடத்தபடமாட்டாது என அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகரச் செயலாளர் அப்பு தலைமையில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராம மூர்த்தியிடம் கோயில் தற்போது உள்ள பக்த சபா கட்டுபாட்டில் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மனுவை அளித்து உள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பு, “வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தொல்லியல் துறை இந்த கோயிலை இது நாள் வரை சிறப்பான முறையில் பாதுகாத்து வருகிறார்கள்.
வரும் ஜூன் 25ஆம் தேதி ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலை மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் கீழ் கொண்டுவரப்போவதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் தற்சமயம் அறங்காவலர் குழு உறுப்பினருக்கான படிவங்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியது.
உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயில் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டதைக் கூட அறியாத அதிகாரிகள் பத்திரிகையில் அறங்காவலர் குழு உறுப்பினருக்கான படிவங்கள் விண்ணப்பிக்க அறிவிப்பை வெளியிட்டது அநாகரிகமான செயல். இந்த நிலையில் முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை? அறங்காவலர் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை?.
இதன் அடிப்படையில் தான் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனு கொடுக்கலாம் என்று வந்தோம், ஆனால் ஆளுநர் வருகை தரவுள்ள காரணத்தால் (DRO) மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனுவினை அளித்து உள்ளோம். இதன் படி மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான ராஜேந்திரன் தலைமையில் பாஜகவினரும் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து இதே கோரிக்கையை முன்னிறுத்தி மனுவினை அளித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கவலை.. மாநகராட்சியில் நடப்பது என்ன?