வேலுார் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணு வீரர் செல்வராஜ் என்பவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இரவு சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை செய்த கும்பலை தேடிவந்தனர்.
இந்த வழக்கில் விஜயராகவபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் (24), பிரபு (24), நேதாஜி நகரைச் சேர்ந்த கிரிதரன் (21), கணேசன் (20) ஆகிய நான்கு பேரை சத்துவாச்சாரி காவல் துறையினர் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த நான்கு பேரும் வேலூர் பிரபல ரவுடி வீச்சு தினேஷின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கொலை செய்யப்பட்ட செல்வராஜ் தன் காதலி பிரச்னையைத் தொடர்ந்து ஊரில் பல்வேறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ரவுடி வீச்சு தினேஷின் கூட்டாளிகளுடன் செல்வராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தக் கும்பலுடன் சேர்ந்த செல்வராஜ் சில சதி வேலைகளில் ஈடுபட்டுவந்தார். இதற்கிடையில் திடீரென செல்வராஜ் ரவுடி வீச்சு தினேஷுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.
வீச்சு தினேஷ் வழக்கு ஒன்றில் பிணை பெற்று மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதற்கு எதிர்தரப்புக்கு செல்வராஜ்தான் திட்டம் வகுத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே செல்வராஜை கொலை செய்ய தினேஷ் கூட்டாளிகள் முடிவுசெய்து, சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை கொலை செய்ய முயற்சித்தனர்.
பின்னர் சம்பவம் நடந்த அன்று நான்கு பேரும் கையில் கத்தி மற்றும் இரும்பு ராடைக் கொண்டு செல்வராஜை சரமாரியாக தாக்கி ஓட ஓட வெட்டிக் கொன்றுள்ளனர்.
பின்னர் காவல் துறையினருக்குப் பயந்து தலைமறைவாக இருந்து, தனது வழக்கறிஞர்கள் மூலம் சரணடையவும் முயற்சி செய்தனர். இந்தச் சூழலில் இன்று எங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த நான்கு பேரையும் கைது செய்தோம்.
இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.