வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடமானம் வைத்த வீட்டை திருப்ப முடியாத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிப்காட் அடுத்த அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கீதா (வயது 45). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முத்துக்கடையில் செயல்பட்டு வரும் பைவ் ஸ்டார் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்த கீதா, ரூ.9 லட்சம் கடனாக பெற்று, அந்த கடனுக்கான தவணையையும் செலுத்தி வந்துள்ளார்.
குடும்ப சூழல் காரணமாக கடந்த சில மாதங்களாக கீதா கடனுக்கான தவணையை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு சீல் வைத்து விடுவதாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் செல்போன் மூலம் கீதாவை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கீதா, தனது இறுதி நிமிடங்களை உருக்கமான பேசி அதை வீடியோவாக பதிவு செய்து விட்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கீதா தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் முத்துக்கடையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடந்து சென்னை - சித்தூர் முக்கிய சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதையறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ராணிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மேற்கொண்ட விசாரணையில் தற்கொலை செய்வதற்கு முன் கீதா கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
அந்த வீடியோவில், கடனை முறையாக செலுத்தாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தனது வீட்டிற்கு சீல் வைத்து விடுவதாக மிரட்டுவதாகவும், வேறு வழி இல்லாமல் நான் இந்த முடிவை எடுக்கிறேன், எனது பி.எப் மற்றும் செட்டில்மெண்ட் ஆகிய தொகைகளை வைத்து அந்த கடனை செலுத்துமாறும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், உங்களை விட்டு செல்வதால் என்னை திட்ட வேண்டாம் என்று தனது பிள்ளைகளுக்கு கடைசி நேரத்தில் உருக்கமாக பதிவு செய்துவிட்டு கீதா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இரு ஊழியர்களை சிப்காட் போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி! பெற்றோர் கதறல்!